ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

போட்டித் தேர்வுகள் சித்தாந்தரீதியானதா?

இந்தியாவின் தேர்வு முறை வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் உற்பத்தி செய்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

எந்தவொரு போட்டித் தேர்வும் வெற்றி, தோல்வி என்ற ஒன்றையொன்று விலக்கும் யதார்த்தங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. எல்லா தேர்வுகளுமே கடுமையானவை அல்ல. அவை போட்டி வடிவை எடுக்கிறபோதே தீவிரத்தன்மை கொள்கின்றன. குடிமைப் பணிகள், மருத்துவம், மேலாண்மை, மென்பொருள் பொறியியல் போன்ற மக்களால் ‘’டார்லிங் டெஸ்டிநேஷன்ஸ்’’ என்று பார்க்கப்படும் துறைகளில் நுழைவதற்கான தேர்வுகளே மிகக் கடுமையானதாக இருக்கின்றன. இந்தத் துறைகளில் கிடைக்கும் லாபங்களை, பலன்களைப் பெற பலரும் முயல்வதே இதற்குக் காரணம். இத்தகைய இடங்களை அடைவதற்கான இந்த ஆசைகள் இவற்றை லட்சியமாகக் கொண்டவர்களை அவர்கள் குழந்தைகளாக இருக்கையிலேயே போட்டி எனும் நோய்க்குறியில் சிக்கவைத்துவிடுகிறது.

சிறப்பிற்குரிய இடங்களை அடைய இந்தத் தேர்வுகள் அவசியம் என்பதால் ஏராளமான மாணவர்களை ஒரு சில நூறு அல்லது ஆயிரம் இடங்களுக்காக போட்டியில் ஈடுபடவைக்கின்றன. பொதுவாக இந்தத் தேர்வுகள் வடிகட்டிகளாகவே செயல்படுகின்றன, வெற்றிகளை விட பல மடங்கு அதிக தோல்விகளை உருவாக்குகின்றன. உதாரணமாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), கிராஜுவேட் ரெக்கார்ட் எக்ஸாமினேஷன்ஸ் (ஜிஆர்இ), கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் (ஜிமேட்), இந்திய தொழில்நுட்பக் கழக கூட்டு நுழைவுத் தேர்வு (ஐஐடிஜெஇஇ), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற அமைப்புகளால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்துகொள்ளும் பல லட்சம் பேர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

இங்கு எழும் கேள்வி என்னவெனில், இந்தத் தேர்வு முறை வெற்றிகளை விட அதிக தோல்விகளை உருவாக்குகையில் மாணவர்கள் ஏன் இது போன்றத் தேர்வுகளை எழுத ஏன் தயாராகிறார்கள்? மேலும், இந்தத் தோல்விகள் பற்றி, அவற்றின் பயங்கர விளைவுகள் பற்றி அரசாங்கம் ஏன் அலட்டிக்கொள்வதில்லை?

தனிப்பட்ட தோல்வி மற்றும் விரக்தியானது சமூக கொந்தளிப்பாக மாறுவதற்கான வாய்ப்பை தடுப்பது அநேகமாக இந்தத் தேர்வின் சித்தாந்தமாக இருக்கலாம். தேர்வு பற்றிய கருத்து மாணவர்களிடையே விரக்தியை விட நம்பிக்கையைதான் அதிகம் உருவாக்குகிறது. உண்மையைச் சொன்னால், நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையிலான பதற்றத்தை சமன் செய்யவே இந்தத் தேர்வு முயல்கிறது. தனது முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்ட சித்தாந்தம் பின்வரும் ஊக்கத்தை போட்டித்தேர்வு எழுதுபவர்களிடையே உருவாக்குகிறது: ‘’இன்று வெற்றி என்னுடையது, அது நாளை உன்னுடையதாகும்.’’ ஒரு துளி நம்பிக்கை விரக்தியின் அழிவு சக்தியை செயலற்றதாக்கிவிடுகிறது. வெற்றிகரமான மாணவர்களின் சாதனைகளை அனைவருக்கும் தெரியபடுத்த ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் தனது முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்ட சித்தாந்தத்தை விளம்பரப்படுத்துவதாக அமைகிறது. ஒரு தர்க்கபூர்வமான அம்சத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கே உரிய விரக்தியின் திவீரத்தை இது மட்டுப்படுத்துகிறது. இந்தத் தேர்வுகள் எந்த அளவிற்கு விதிகளின் அடிப்படையிலானவையோ, வெளிப்படையானவையோ அந்த அளவிற்கு அறிவுபூர்வமானவை என்று கருதப்படுகிறது. தேர்வுகளின் இந்த வெளிப்படையான இயல்பு தேர்வெழுதுபவர்களிடையே நம்பிக்கையை உருவாக்குகிறது. இறுதிப் பகுப்பாய்வில் இந்த நம்பிக்கை அவர்களது தோல்வியை நியாயப்படுத்துகிறது.

தோல்விக்கு காரணம் தாங்களே என்று தோல்வியடைகிறவர்கள் தங்களையே குற்றம் சொல்லிக்கொள்கிறார்கள். மீண்டும் மீண்டும் முயற்சித்து தோல்வியடையும்போது தற்கொலை போன்ற தீவிர முடிவுகளுக்கும் செல்கிறார்கள். போட்டித் தேர்வுகளின் சித்தாந்தத்திற்கே உரிய உள்ளார்ந்த தர்க்கம் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையிலான சமநிலையை அடைவதற்கான அடிப்படைகளை வழங்குகிறது. போட்டித் தேர்வு எழுதும் தனிப்பட்ட மாணவர் ஒருவர் தனது சாதிக்கும் ஆசைகளை சுமப்பவராக இருப்பதை விட இந்த சித்தாந்தத்தை சுமப்பவராகவே இருக்கிறார்.

வேறுபட்ட வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசாங்கத்திற்கு, வெற்றியையும் தோல்வியையும் தனிநபர் தொடர்பானதாக ஆக்குவது என்பது  அதன் தார்மீக பொறுப்பை தட்டிக்கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்திய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கோபத்தைப் பற்றி அரசாங்கம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இந்தக் கோபத்தை அப்படியே விடும் பட்சத்தில் அது மிக ஆபத்தான அளவிற்கு சென்றுவிடும். நல்ல வேலைகளுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து சுருங்கிவருவதைப் பற்றியும் அது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வேலை தேடுகிறவர்கள் அனைவரையும் ஒரே துறையில், குறிப்பாக குடிமைப் பணிகள் துறையில் கவனத்தைக் குவிக்கச் செய்வது ஆட்சிநிர்வாக கட்டமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நாடு முழுவதிலும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் காளான் போன்று முளைத்துவருவது பற்றி அரசாங்கம் கவலைகொள்வதாக இல்லை.

தோல்வியில் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்வது, தீவிர விரக்திக்கு ஆளாவது ஆகியவற்றை தனிநபர் தோல்வி என்பதாக பார்க்கக்கூடாது. அப்படி பார்க்கையில் அது தனிநபர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பதற்கு இட்டுச்செல்லுமே தவிர பல்வேறு வகைப்பட்ட நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருவதில் தோல்வியடைந்துள்ள அமைப்பை விசாரணைக்குட்படுத்துவதற்கு இட்டுச்செல்லாது. தகுதியானவர்களுக்கு போதுமான அளவிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் அரசாங்கம் தொடர்ந்து தோல்வியடைந்துவருகிறது. இந்தப் பின்னணியில், ஒருவரது விருப்பம் என்பது பல்வேறு வாய்ப்பு வெளிகளுக்கு, துறைகளுக்கு சமமாக பகிரப்படுவது என்பது நல்லது. ஆனால் அத்தகைய வாய்ப்புகள் இல்லை அல்லது மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. விவசாயம் மற்றும் தொழிதுறையில் வேலைகளின் கண்ணியத்தை அரசாங்கம் மீட்டு நிலைநிறுத்த வேண்டும். வேலைக்கான அடிப்படை வாய்ப்புகள் இல்லாத நிலையில் யுபிஎஸ்சி-யானது சிலரின் வெற்றிக்கும் பலரின் விரக்திக்குமான களமாகவே இருக்கும். நுகர்வோர் முதலாளித்துவத்திற்கு பல்வேறு வகைப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல் இருப்பதாகத் தெரியவில்லை. இது வேலை வாய்ப்புகளை உருவாக்கியபோதிலும் அவை தங்கள் சுய மதிப்பிற்கு பங்கம் விளைவிப்பதாக கருதுவதால் வேலைதேடுபவர்கள் இவற்றால் ஈர்க்கப்படுவதில்லை. இந்த ‘’அவமானகரமான வாய்ப்புகளிலிருந்து’’ தப்பிக்க வேண்டியிருப்பது யுபிஎஸ்சி வழங்கும் ‘’பாதுகாப்பான’’ வாய்ப்பு விஷயத்தில் பெரும் அழுத்தத்தை கொண்டுவருகிறது. இந்த வகையில் போட்டித் தேர்வுகள் என்ற அமைப்புமுறை தொடர்ச்சியான தோல்விகளை நியாயப்படுத்துவதற்கான சித்தாந்தமாக செயல்படுகிறது. சிலரது வெற்றியை கொண்டாடுவதன் மூலம் இந்த நியாயப்படுத்துதல் சாதிக்கப்படுகிறது.

Back to Top