காசநோய்க்கு முடிவுகட்டியாக வேண்டும்
2030க்குள் காசநோயை ஒழிக்கவேண்டுமெனில் அதற்கு செயல்படவேண்டிய நேரம் இதுவே.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
உலக அளவில் காசாநோய் குறைந்துவருகிறது. ஆனால் 2017ல் உலக அளவில் 1 கோடிப்பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது, 1.6 கோடிப்பேர் இறந்துகொண்டிருப்பது நாம் இன்னும் வெகு தூரம் செல்லவேண்டியிருப்பதைக் காட்டுகிறது. பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் காசநோய் இன்றும் கூட உயிரைக்குடிக்கும் நோயாக இருக்கிறது. இது நோயாளிகளையும் அவர்களது குடும்பங்களையும் கறைபடிந்தவர்களாக ஆக்குவதுடன் அவர்களை சமூக-பொருளாதாரரீதியாக பெரும் விலை கொடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாக்குகிறது. 2018 செப்டம்பர் 26ஆம் தேதி நடந்த ஐக்கிய நாடுகளின் உயரளவிலான முதல் கூட்டத்தில் 2030 ஆண்டுக்குள் காசநோயை இல்லாதாக்க நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் முயற்சிகளை முடுக்கிவிடுவது, நிதியுதவியை அதிகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. உலகில் காசநோயின் மொத்த சுமையில் 27%த்தை இந்தியா சுமக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் காசநோயை முடிவுக்கு கொண்டுவருவோம் என்ற மாநாடு நடந்தது. 2025க்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மருத்துவசேவை இருக்கிற நிலையை பார்க்கிற போது இது சாத்தியமற்றது.
காசநோயாளிகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுவது குறைவாக இருப்பதால் அவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவது, நோயை கட்டுப்படுத்துவது, சிகிச்சையளிப்பது கடினமாகிறது. உலகெங்கும் 1 கோடிப்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதில் 64 லட்சம்பேர் பற்றி மட்டுமே தகவல்கள் தெரிந்துள்ளன. தகவல்கள் கிடைக்காத 36 லட்சம்பேரில் இந்தியாவில் மட்டும் 26% பேர் இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் காசநோய் இருப்பவர்கள் பற்றி தெரியவருவது 2013லிருந்து அதிகரித்துவருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கிடைப்பது அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் குறைவாக இருப்பதாலேயே முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய இந்த நோய் மிக ஆபத்தானதாகவும், பெரிதும் பரவியிருப்பதாகவும் ஆகிவிட்டது.
காசநோய் தெரிவிக்கப்படவேண்டிய நோய் என 2012ல் அறிவிக்கப்பட்டபோது இந்திய அரசாங்கம் ‘’நிக்ஷே’’ (Nikshay) என்ற ஆன்லைன் வசதியை மருத்துவர்களுக்காகவும், மருத்துவமனைகளுக்காகவும் உருவாக்கியது. காசநோயாளிகள் பற்றிய தகவல்களை மருத்துவமனைகள், குறிப்பாக தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்திற்கு தெரியபடுத்த வேண்டுமென்பதற்காக இது உருவாக்கப்பட்டது. நிக்ஷே தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து அதற்கு ஏராளமான தடைகள். இத்தகைய அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதைப் பற்றி விழிப்புணர்வு இல்லாதது, இதை தவறாக புரிந்துகொண்டதால் நோய் பற்றி தகவல் தெரிவிப்பதில் விருப்பம் காட்டாதது, தெரிவிப்பதை தொடர்ச்சியாக செய்யாதது, தெரிவிக்கிறபட்சத்தில் அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் எதுவும் நடக்காதது என பல தடைகள். முன்பெல்லாம் தனியார் மருத்துவமனைகள் காசநோயாளிகள் பற்றி தெரிவிப்பதே இல்லை. சமீபகாலமாக தெரிவிக்கத் தொடங்கிய பிறகும் நிக்ஷே ஆன்லைன் மெதுவாக இயங்குவதால் இது அவ்வளவு வெற்ரிகரமாக இல்லை. ஆனால் இதே போன்ற ஆன்லைன் அமைப்பு உருவாக்கப்பட்ட சீனாவில் காசநோய் குறைப்பு அதிகத் திறம்பட செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 2018 மார்ச் மாதம் அரசிதழில் அறிவித்ததிலிருந்து காசநோயாளிகள் பற்றி தகவல் தெரிவிக்காதது தண்டனைக்குரியதாக்கப்பட்டது, மருந்தகங்களும் காசநோயாளிகளுக்கு மருந்துகள் தருவதை ஆவணப்படுத்தவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது, தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்கும் காசநோயாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது போலவே இந்த முறையை முரணின்றி, தொடர்ச்சியாக பயன்படுத்துவதும் ஒரு சவால்தான். நோயாளிகள் பற்றி தெரிவிக்கப்படுவது அதிகரித்தது, ஆனால் சிகிச்சையளிக்கப்படுவது சிறப்பான அளவிற்கு அதிகரிக்கவில்லை. 2016ல் தெரியவந்த அனைத்து காசநோயாளிகளில் 22% பேர் விஷயத்தில் சிகிச்சைப் பற்றிய தரவுகள் இல்லை. சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படாவிடில் நோயாளிகள் கைநழுவிப்போவார்கள், நோயானது காசநோய்க்கு தரப்படும் சில மருந்துகளுக்கு கட்டுப்படாததாகிவிடும் (எம்டிஆர் காசநோய்), பின்னர் எந்த மருந்துக்குமே கட்டுப்படாததாகிவிடும் (எக்ஸ்டிஆர் காசநோய்). மேலும், தெரியவந்த நோயாளிகள் விஷயத்தில் 69% பேருக்கு சிகிச்சை வெற்றிகரமாகியிருக்கிறது, சில முக்கிய மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலையில் உள்ள நோயாளிகள் விஷயத்தில் 46% பேருக்கு மட்டுமே வெற்றிகரமாகியிருக்கிறது. இந்த நோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களான காசநோயாளிகள் குடும்பத்திலிருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகள் விஷயத்தில் நோய்த்தடுப்பு, சிகிச்சை என்பது இன்னமும் குறைவாக இருக்கிறது.
உலக மக்கள்தொகையில் 170 கோடிப்பேருக்கு, அதாவது 23% பேருக்கு உள்ளுறையும் காசநோய் தொற்று இருக்கும் நிலையில், எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருக்கும் மக்கள் பிரிவினரிடையே இந்நோய் பரவாது தடுக்க, புதிய நோயாளிகள் உருவாகதிருக்க நடவடிக்கைகள் எடுப்பது மிக முக்கியம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச காசநோய் அறிக்கை-2018ல் மது, புகை, சர்க்கரைநோய், எச்.ஐ.வி/எய்ட்ஸ், ஊட்டச்சத்துக்குறைவு ஆகிய ஐந்தும் காசநோய் விஷயத்தில் ஆபத்தான அம்சங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பிற ஏழை நாடுகளில், குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் ஊட்டச்சத்துக்குறைவுதான் மிகப் பெரும் ஆபத்தாக இருக்கிறது. காசநோயை தடுப்பதும், அதற்கு வெற்றிகரமாக சிகிக்க்சையளிப்பதும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைப்பதை மேம்படுத்துவதில் இருக்கிறது. இந்த நோய் குறித்து நம்மிடம் இருக்கும் தரவுகள் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக பழமையானவை. கடைசியாக காசநோய் பற்றி நடந்த தேசிய அளவிலான கணக்கெடுப்பு 1955ல் நடந்தது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தேசிய அளவில் காசநோய் குறித்து கணக்கெடுப்பு நடத்துவது நோயை கட்டுப்படுத்தவும், நோய்த் தடுப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும் உதவும். இத்தகைய ஒரு கணக்கெடுப்பை 2019/2020ல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆகவே மதிப்பீடுகளின் அடிப்படையில் அல்லாமல் நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க நமக்கு ஒரு சில ஆண்டுகளாகும்.
காசநோயின் பயங்கரத்தையும் அதன் கொள்ளைநோய் தன்மையையும் கருத்தில்கொள்கையில் இந்த நோயை குணப்படுத்த உருவாகியுள்ள முறைகள், நோயை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள், தடுப்பு மருந்துகள், புதிய மருந்துகள் குறைவாகவே உள்ளன, குறிப்பாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சை விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துடன் ஒப்பிடுகையில். எம்டிஆர் காசநோய்க்கான மருந்துகளான பெடாகுய்லைன் மற்றும் டெலாமனிட் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் கிடைத்திருக்கின்றன. மேலும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினரிடையே இந்நோய் பரவாது தடுக்க தடுப்புமருந்து கண்டுபிடிக்கவேண்டியது மிகவும் அவசியம். ஆராய்ச்சி, புதிய மருந்துகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகின்றன. சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட்டாலொழிய, இந்தியா மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதில் முன்னணியில் உள்ள நாடுகளில் காசநோயை 2030க்குள் ஒழிப்பது என்பது சாத்தியமாகாது.