ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பருவநிலை மாறுபாடும் ஏழைகளும்

உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பல ஆண்டுகளாக வளரும் நாடுகள் ஏற்பட்ட முன்னேற்றங்கள் தலைகீழாகிவிடும்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்த பூமியையும் அதில் வாழும் மனிதர்கள், தாவரங்கள், மற்றும் விலங்குகளையும் பல்வேறு வழிகளில் பாதித்துவரும் அவசரப் பிரச்னை பருவநிலை மாறுபாடு. ஆனால் இது ஏழைகளை அளவிற்கதிகமாக பாதித்திருப்பதுடன் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பருவநிலை மாறுபாடு என்பது படிப்படியாக, மெல்ல உருவாகிவரும் பிரச்னை என்று முன்னர் நம்பப்பட்டதை ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாறுபாட்டிற்கான அரசாங்கங்களின் கூட்டமைப்பு 2018 அக்டோபரில் வெளியிட்டுள்ள உலகம் வெப்பமடைதல் 1.5 டிகிரி சி அறிக்கை தவறென்று காட்டுகிறது. “1.5 டிகிரி வெப்பம் அதிகரிப்பது என்பது கோடிக்கணக்கான மக்களை வறுமைக்கு ஆளாக்கும்” என்று இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு எப்படி ஏழைகளை அதிகமாக பாதிக்கிறது என்பதற்கு இப்போது அனுபவரீதியாகவே நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. பருவநிலை மாறுபாட்டின் காரணமாக தண்ணீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் விளைவாக அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான போட்டி அதிகரித்துள்ளது. இது ஏற்கனவே இருக்கும் மோதல்களை தீவிரப்படுத்துவதுடன் புதிய மோதல்களையும் உருவாக்குகிறது. கேப்டவுன் மாநகரத்தில் 2015ல் தண்ணீர் தட்டுப்பாடு தொடங்கியது. உலகில் தண்ணீர் இல்லாத முதல் மாநகரமாக மாறும் ஆபத்தில் கேப்டவுன் இருக்கிறது. கேப்டவுனிலுள்ள ஏழை மக்கள் பல ஆண்டுகளாகவே தண்ணீர் கிடைக்காத நிலையில் இப்போதுள்ள நெருக்கடியால் இன்னும் அதிகம் பாதிக்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். காங்கோ குடியரசில் மழைக்காலம் வழக்கமானபடி இல்லாதுபோனதால் உணவு உற்பத்தி குறைந்துபோனதுடன், பயிரிடுவதற்கு உகந்த நிலத்திற்கான போட்டியும் அதிகரித்து நாட்டை இன மோதல்களுக்கு இட்டுச்சென்றுள்ளது. இத்தகைய மோதல்கள் ஏழைகளையே அதிகம் பாதிப்பதுடன் அவர்களை இடப்பெயர்விற்கும் ஆளாக்கி விஷ வளையத்தில் சிக்கவைக்கிறது.

பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் வெள்ளங்கள் மற்றும் வறட்சிகளால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அது உணவின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் ஏழைகள் பசியாலும் ஊட்டச்சத்துக்குறைவாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உலக உணவு திட்ட அமைப்பின் உணவு நெருக்கடி குறித்த 2018ஆம் ஆண்டின் உலக அறிக்கை, “பருவநிலை பேரழிவுகளால் 23 ஆப்பிரிக்க நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 3 கோடியே 90 லட்சம் பேர் உடனடி உதவி தேவைப்படுகிறவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறுகிறது.

 உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த 2018ஆம் ஆண்டின் உலக அறிக்கையின்படி, “2017ல் 143 நாடுகளில் மோதல் மற்றும் பேரழிவுகளால் சுமார் 3.6 கோடி மக்கள் உள்நாட்டு இடப்பெயர்விற்கு ஆளாகியிருக்கிறார்கள்.” அதாவது ஒவ்வொரு நாளும் 80,000 பேர் இடப்பெயர்விற்கு ஆளாகிறார்கள். இதற்கான முதன்மையான காரணங்களாக இருப்பவை வெள்ளம் மற்றும் சூறாவளி எனவும் வெள்ளத்தால் 86 லட்சம் பேர்களும் சூறாவளியால் 75 லட்சம் பேர்களும் இடப்பெயர்வுக்கு ஆளாகியிருப்பதாக அறிக்கை கூறுகிறது. டாக்காவில் கடலோர வெள்ளங்களால், போர்ட்டோ ரீக்கோவில் மரியா சூறாவளியால், மேற்கு ஆப்பிரிக்காவின் சாட் ஏரி வற்றிப்போனதால் என பருவநிலை அகதிகளை உலகம் முழுவதிலும் காண முடியும். 2100 வாக்கில் பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை 28% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 பருவநிலை மாறுபாட்டால் அதிக இழப்புகளை சந்தித்திருக்கும் உலக நாடுகளின் வரிசைப்பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திலுள்ளது. சுமார் 80 கோடி மக்கள் இங்கு கிராமங்களில் வாழ்கிறார்கள். இவர்கள் தங்களது வாழ்வாதாரங்களுக்கு விவசாயத்தையும் இயற்கை வளங்களையும் நம்பியிருப்பவர்கள். இங்கு சுமார் 50% விவசாய நிலம் மழையை நம்பியிருப்பவை என்பதால் பருவமழையின் காலங்கள் மாறுகிறபோது இம் மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. பருவநிலை மாறுபாட்டால் கோதுமை விளைச்சல் குறைந்திருப்பதையும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்திருப்பதையும் நடைமுறை ஆதாரங்கள் காட்டுகின்றன. பருவநிலை காலங்களில் ஏற்பட்டுள்ள நீண்ட கால மாற்றங்களை சிறு விவசாயிகள் அறிந்திருப்பதும், அதன் விளைவாக உருவாகியுள்ள சமூக-பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ள தங்களது செயற்பாடுகளை மாற்றிக்கொண்டிருப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன. சிறு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகளோ, பிற காப்பீடுகளோ இல்லாததால் அவர்கள் பருவநிலை மாறுபாட்டால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறாக ஏற்கனவே இருக்கும் வறுமை, ஊட்டச்சத்துக்குறைவு, விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை பருவநிலை மாறுபாடு மேலும் மோசமாக்குகிறது.

பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகக் கூறிய வளர்ந்த நாடுகள் அதிலிருந்து பின்வாங்கக் கூடாது என 2018 கேட்டோவிட்ஸா பருவநிலை மாநாட்டில் இந்தியா குரல்கொடுத்தது. பருவநிலை மாறுபாடு ஏற்படுவதற்கு எந்த வகையிலும் காரணமாக இல்லாத ஏழை மற்றும் வளரும் நாடுகள்தான் பருவநிலை மாறுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றன. இந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பாதிக்கப்படுவதுடன் பருவநிலை மாறுபாட்டை தடுத்துநிறுத்துவதற்கான தங்களது கடப்பாடுகளையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் ஒருங்கே சமாளிக்க திணறுகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உலக அளவில், குறிப்பாக இந்தியாவில் பல ஆண்டுகளாக நிகழ்ந்த வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் தலைகீழாய் மாறும் ஆபத்துள்ளது.

 பருவநிலை மாறுபாடு மற்றும் அதன் விளைவுகளைப் பொறுத்தவரை கொஞ்ச காலமாகவே எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறது. வளர்ந்த, வளரும் நாடுகளுக்கிடையிலான, ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையிலான, வடக்கு, தெற்கிற்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் முன்னெப்போதையும் விட அதிகரித்துவருகின்றன.

Back to Top